மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை மே 15ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
அதில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுவோர் ஆகியோரை தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பலாம். தனி மனித பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றிய மருத்துவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வரையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் கால அளவு 14 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கால அளவை சுகாதாரப் பணியாளர்களுக்கு 5 முதல் 7 நாள்களாக குறைப்பட்டுள்ளது. பணிக்குத் திரும்பிய பின்னர், அவர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனையை மேற்கொள்ளலாம். மேலும், இது கரோனா பெருந்தொற்றிற்கான போரை நிறுத்த உதவும்" என தெரிவித்திருந்தது.
இது குறித்து மருத்துவச் சங்கங்கள் எய்ம்ஸ் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், "சுகாதாரப் பணி ஊழியர்களின் தனிமைப்படுத்துதல் கால அளவில் மாற்றம் செய்தது அறிவியல் பூர்வமற்ற நடவடிக்கை. சுகாதாரப் பணியாளர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் கரோனா பரிசோதனை செய்து அவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதில் சிக்கல் உள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த 14 நாள்களையே தொடர்ந்து அனுமதிக்கவேண்டும். பணியாளர்களுக்கு 5 முதல் 7 நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தியிருப்பது கரோனா நோய்க்கு எதிரான போரை நீட்டுவதற்கு வழிவகுக்கும். எனவே மத்திய அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை - டெல்லி துணைநிலை ஆளுநர்