தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு; உஷார் நிலையில் லக்னோ

By

Published : Sep 29, 2020, 8:01 PM IST

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில் நீதிமன்றம் அமைந்துள்ள லக்னோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Babri Masjid
Babri Masjid

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை (செப்.30) தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் தீர்ப்பு தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் துணை பிரதமரான அத்வானி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் தீர்ப்பன்று நேரில் ஆஜராக வேண்டும். இதையடுத்து நீதிமன்றம் அமைந்துள்ள லக்னோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு காரணமாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, மருத்துவர்கள் அனுமதித்தால் தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தூக்கு தண்டனையைக் கூட ஏற்பேனே தவிர பிணை கேட்க மாட்டேன் என உமா பாரதி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் அமைதியான சூழலை நிலைநிறுத்த காவல்துறை அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் டி.கே. பாண்டே தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 351 சாட்சியங்களை சிபிஐ ஆஜர்படுத்தியுள்ளது.

மேலும், இவ்வழக்கின் வாதம் தொடர்பாக 400 பக்க அறிக்கை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் அவருக்கு பதவி நீட்டிப்பை வழங்கியது.

இதையும் படிங்க:சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்ஐஏ அலுவலகங்கள் - மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details