பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவிற்கு வேலை நிமித்தமாக பிகாரிலிருந்து இடம்பெயர்ந்த ஜத்தின் ராம், பிந்தியா தம்பதியினரை, ஊரடங்கு வெகுவாக பாதித்தது. இதனால் பிகார் மாநிலத்திற்கு மீண்டும் செல்ல திட்டமிட்டார் ராம். இவருடைய மனைவி பிந்தியா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவரை சாலை நிமித்தமாக அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிறப்பு ரயிலில் அழைத்து செல்ல ராம் விரும்பினார்.
ஆனால், ராம்- பிந்தியா தம்பதிக்கு, ஊருக்கு செல்ல ரயிலின் அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை. இதனால், பிந்தியாவை அழைத்துக்கொண்டு, ராம் நடந்தே செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த வாரம் லூதியானாவிலிருந்து புறப்பட்டவர்கள், 100 கி.மீ. தூரம் பயணம் செய்து அம்பலா நகரை அடைந்தனர். அப்போது பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினரின் உதவியுடன் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.