அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், மேகாலயாவில் உள்ள இந்திரா காந்தி சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் மண்டல மையத்தில் சிகிச்சைக்கு செல்லுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் குழந்தையை காரில் ஷில்லாங் அழைத்து வந்தனர். நேற்று (ஜூலை 7) குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகக் கூடாது என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பரிசோதனையில் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், குழந்தையின் உடல் நலம் தேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அன்று மாலையே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மேகாலயா சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல். ஹேக் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.