உத்தரப் பிரதேசம்:ஆக்ரா கமலா நகரில் 90 வயது முதியவர் நடத்திவரும் ‘கஞ்சி பாடா’ எனும் சிற்றுண்டி கடை தொடர்பான காணொலிப் பதிவு இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆக்ரா நகரில் 40 வருடங்களாக, நாராயண் சிங் (90) கஞ்சி பாடா எனும் சிற்றுண்டி கடையை நடத்திவருகிறார். கரோனா காலத்தின் தாக்கம் இவரது தொழிலையும் விட்டுவைக்கவில்லை. பெரும் இழப்புகளைச் சந்தித்த இவர் கடையில் வியாபாரமின்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வந்துள்ளார்.
இந்த சோகத்தை வாடிக்கையாளராக வந்த பெண்ணிடம் நாராயண் சிங் மனம்விட்டு பகிர்ந்துள்ளார். முன்னதாக இதேபோல கரோனா காலத்தில் தொழிலில் இழப்பைச் சந்தித்த ‘பாபா கா தாபா’ குறித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து காணப்பட்டனர்.
இதற்கு அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவாலும், மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வழிமுறையை அறிந்த அந்த பெண் தனிஷ்டா, ‘கஞ்சி பாடா’ குறித்த ஒரு காணொலிப் பதிவை இணையத்தில் பகிர்ந்தார். அவர் நினைத்தது போலவே, இணையத்தில் அது பிரபலமானது. இதனையடுத்து அவரது கடைக்கு நீதிபதி முதல் அனைத்து தரப்பு மக்களும் வந்து தங்களின் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.
“கரோனா காலத்தில் தங்களின் தொழிலை இழந்து தவித்து வரும் இதுபோன்ற சிறு வணிகர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் ‘பாபா கா தாபா’ குறித்த காணொலி வெளியானதிலிருந்து, என் மனதிற்குள் தோன்றியது. அந்த முறையில்தான் ‘கஞ்சி பாடா’ கடையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். நான் நினைத்தது போலவே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் தனிஷ்டா.
இது குறித்து முதியவர் நாராயண் சிங் தெரிவிக்கையில், “தற்போது நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நான் எதிர்பார்க்காத ஒரு நல்ல நிகழ்வை, தனிஷ்டா அமைத்து கொடுத்துள்ளார்” என்றார்.