பட்டதாரி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன். நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருந்து வரும் இவர், இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் காலங்களில் மொழி, மாநிலம் பாராமல் உதவிகளை செய்து வருகிறார். தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஸ்ஸாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அபி சரவணன்.
மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், நண்பர்களுடனும் மற்றும் அஸ்ஸாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி, உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அபி சரவணன் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மலைவாசிகளை சந்திக்கச் செல்லும்போது, நிவாரண பொருட்களுடன் அவர்களின் விருப்ப உணவான அவல், வெல்லம் வாங்கிச் சென்று கொடுத்தார்.
தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஓரளவு முடித்துவிட்ட அபி சரவணன், ஐந்தாவது மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
அபி சரவணனின் சேவையை பாராட்டி அஸ்ஸாம் மக்கள் 'Kamsa' எனும் மரியாதையையும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 'Araina' எனும் அரசாங்க மரியாதையையும் வழங்கி கௌரவித்தனர். இளம் நடிகர்கள் சினிமாவில் தங்களது அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டிருக்க நடிகர் அபி சரவணனோ, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தேசத்தின் எல்லை வரை சென்றுள்ளார்.