தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 1:45 PM IST

ETV Bharat / bharat

விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி

டெல்லி: ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள நிலையில், பாஜக எம்பி மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடியச் சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

பாஜக எம்பி
பாஜக எம்பி

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே, ஹரியானா சோனிபட் மாவட்டத்திற்கு சென்ற பாஜக மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி, விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதனை பொறுப்பற்ற செயல் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கூறுகையில், "இம்மாதிரியான பேரிடர் காலத்தில், ஊரடங்கு விதிகளை மீறி மாநிலம் விட்டு மாநிலம் சென்ற திவாரி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார்.

குடிபெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலம் தினமும் அரங்கேறி வருகிறது. அப்போது, சாலை விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மனிதநேயத்தை மதிக்காத மக்கள் பிரதிநிதி மாநிலம் விட்டு மாநிலம் சென்று எப்படி கிரிக்கெட் விளையாடுவார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவரால் எப்படி பொறுப்பற்று இருக்க முடியும்?

டெல்லி, ஹரியானாவை இணைக்கும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டதால், மருத்துவ பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான் ஏழை மக்களுக்கு உணவளிக்க சென்றேன். ஆனால், பாஜக அரசு என்னை தடுத்து நிறுத்தியது. ஆனால், கிரிக்கெட் விளையாட சென்ற திவாரியை பாஜக அரசு தடுத்து நிறுத்தவில்லை. ஏழை மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பாஜக, வெறுப்புணர்வை பரப்புவது இதன்மூலம் தெரிகிறது" என்றார்.

பார்வையாளர்கள் இல்லாத கிரிக்கெட் மைதானத்திற்கு, உரிமையாளர் அழைப்பின் பேரில் திவாரி சென்றதாக பாஜக விளக்கமளித்துள்ளது. முன்னதாக, பார்வையாளர்கள் இல்லாத கிரிக்கெட் மைதானங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: N - 95 முகக் கவசங்களின் விலை என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details