உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹபூர் மாவட்டம் சாமிரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாமீம். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டு மின்மீட்டரை திருத்தியமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு மின்கட்டணம் செலுத்த வலியுறுத்தி மின் வாரியத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.
அதை வாங்கிப் பார்த்த ஷாமீமிற்கு ஒரு நிமிடம் உயிர்போய் உயிர் வந்ததுபோல் ஆகிவிட்டது. அதைக் கேட்டால் நமக்கே ஷாக்கடிக்கும்! அந்தக் கடிதத்தில், 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் அளவுக்கு ஷாமீம் மின்சாரத்தை பயன்படுத்தியதாகவும், அதனை உடனே செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, ஷாமீம், 'ஏழ்மை நிலையில் வசிக்கும் என்னிடம் எப்படி இவ்வளவு பணம் இருக்கும். இதை நான் எப்படி செலுத்துவேன். நாங்கள் இதை சொன்னால் யார் கேட்பார்கள். இது குறித்து மின் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தால், மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிப்பதாக மிரட்டுகிறார்கள்' என அப்பாவியாய் பேசுகிறார்.