சீனாவில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் - 19 எனப்படும் கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை மக்களிடம் ஏற்படுத்திவருகிறது. கரோனாவை தடுக்கும் முயற்சியாக அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகின்றன.
இதனிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி விமான சேவையையும் அந்நாட்டு அரசு ரத்துசெய்துள்ளது.
அதேபோல மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் இந்தியாவுக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் பெரும்பாலான இடங்கள் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த கேரள மாநிலத்தவராவர்.
கேரளா மாணவர்கள் வெளியிட்டுள்ள காணொலி தாங்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளது குறித்து கேரளா மாணவர்கள் காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ”வீட்டிற்குச் செல்ல பயண டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்த பின்னரும், இந்தியாவுக்கு வர முடியாமல் தவிக்கின்றோம்.
எங்களுடைய நுழைவு இசைவு (விசா) காலக்கெடு முடிந்துவிட்டதால் அதனைப் புதுப்பிக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. இந்திய அரசு எங்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:இத்தாலியிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா