இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கிட்டத்தட்ட மக்கள் தொகை 130 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், குழந்தை வளர்ப்பு என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பள்ளி செலவு, வீட்டு செலவு, அத்தியாவசிய தேவைகள், குழந்தைகளுக்கான உணவு, பெட்ரோல், மின் கட்டணம் என அனைத்தையும் சமாளிப்பதற்கு குடும்பத்தின் கணவர் - மனைவி இருவரும் வாழ்க்கையில் முக்கால்வாசி நேரங்களில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலவுக்குச் சென்ற விக்ரம் லேண்டரை போல் எங்கு உள்ளது எனத் தெரியாத அளவிற்கு அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில் நம் முன்னோர்கள் போல் அல்லாமல் தற்போதைய தலைமுறை மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். பெரும்பாலும் இரு குழந்தைகள் போதும் என்ற நிலைக்கு இந்திய மக்கள் வந்துவிட்டனர்.
இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற 38 வயதாகும் பெண். 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.