உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் தங்க நகைகளின் சில்லறை விற்பனைக்கான தேவைகள் அதிகளவு உள்ளன. இந்தப் பெருந்தொற்றின் காலத்தில் 37 விழுக்காடு இந்தியப் பெண்கள், தற்போதுவரை தங்கம் சார்ந்த பொருள்களை வாங்க முன்வரவில்லை. ஆனால், இவர்கள் வருங்காலங்களில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்தியாவில் 60 விழுக்காடு பெண்கள் தங்களுக்குத் தேவையான தங்க நகைகளை வைத்துள்ளனர். புதிய வடிவமைப்பு, தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்ததுபோல் வடிவங்களை மாற்றியமைக்கவும்; அவர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். தாங்கள் உடுத்தும் புடவை உள்ளிட்டப் பிற பொருள்களிலும் தங்கப் பொருள்களை சேர்ப்பது தற்பொழுது அதிகரித்து வருகிறது.
இந்தியப் பெண்களில் 37 விழுக்காட்டினர் தங்கம் கொள்முதல் செய்யும் முனைப்போடு உள்ளனர். பெரும்பாலான தங்க நகைகள் வாங்குபவர்களில் 44 விழுக்காட்டினர், கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களாகவும், 30 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். நகைக் கடை வைத்திருப்பவர்களுக்கு தங்கள் தொழிலில் சில புதிய யுக்திகளைப் புகுத்தி, மேலும் பல வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு இது ஒரு நல்ல காலம்.
நகர்ப்புற பெண்கள் தங்கம் வாங்குவது, தங்களது வாழ்க்கைக்கான மூலதனமாகவும், பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். இது அவர்கள் மீது சமூகம் கொண்டுள்ள எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் கருதுகின்றனர். கிராமப்புற பெண்கள் தங்க நகைகளை மரியாதை அளிக்கும் ஒரு பொருளாக மதிப்பிடுகின்றனர்.