இன்றைய இளைஞர்களுக்கு பப்ஜி மீது அதிக மோகம் வந்துவிட்டது. பலர் பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். இதனால் அவ்வப்போது சில விபரீதங்களும் நடந்துவருகிறது.
அதில் ஒன்றாக மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே தீவிரமாக பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், "நாகேஷ் கோரே (24), ஸ்வப்னில் அன்னபூர்னே (22) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று மாலை ஹிங்கோலி புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது அந்த வழியாக ஹைதராபாத்-அஜ்மீர் ரயில் சென்றுள்ளது.
இந்நிலையில் ரயில் வருவது கூட தெரியாமல் மிக தீவிரமாக பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து உயிரிழந்த இளைஞர்களின் உடலை நேற்றிரவு கண்டெடுத்தோம். இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்"எனக் கூறினார்.
இதனிடையே பப்ஜி விளையாட்டு குழந்தைகள், இளைஞர்கள் மனதை பெரிதளவில் பாதிப்பதால் அதனை தடைசெய்ய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில்பப்ஜி விளையாட்டுக்குதடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.