உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இவ்விழாவையோட்டி தேவத்ர ஹான்ஸ் பாபா சன்ஸ்தான் அமைப்பால் அயோத்தியில் உள்ள மணி ராம் தாஸ் சாவ்னியில் 1 லட்சத்து 11 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து சாவ்னியில் பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "இந்த லட்டுக்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு வழங்குவார். பின்னர், அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் லட்டு வழங்கப்படும். அடுத்ததாக நாடு முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களுக்கு பிரத்யேக பையில் வைத்து அனுப்பப்படும்.
அந்தப் பையில், அயோத்தி, ராமர் கோயிலின் வரலாறு குறித்த மூன்று புத்தகங்களும், ஒரு பெட்டி லட்டும், ஒரு சால்வையும் இருக்கும். லட்டு தயாரிக்கும் கடந்த நான்கு நாள்களாக மும்முரமாக நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியாக பாதுகாப்புப் பணியிலிருந்த 16 காவலர்களுக்கும், ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி அடிக்கல் நாட்டும் விழா நடைபெறும் எனக் தகவல்கள் வெளியாகியுள்ளன.