ஜம்மு - காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேயுள்ள தாவர், கெரன், உரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பாகிஸ்தான் ராணுவ சிறப்பு சேவைக் குழுவையைச் சேர்ந்த 2-3 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவ பதுங்குக் குழிகள், ஏவுதளங்கள், எரிபொருள் கிடங்கு போன்றவை அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். உரி பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் வீரமரணமடைந்ததாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.