நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், மே 12ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை டெல்லியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு 15 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் குவிந்தனர். நேற்று மாலை வரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 39 பயணிகள் டிக்கெட் முன்பதிவுசெய்துள்ளனர்.
நேற்று மாலை டெல்லியிருந்து இரு ரயில்கள் புறப்பட்டுள்ளன. மற்ற நகரங்களுக்கு செல்லும் ரயில்களின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கயான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத், ஜம்மு தவி ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் செல்லவுள்ளன.
இதுகுறித்து வடக்கு ரயில்வே நிர்வாகிகள் தரப்பில், ”செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும். ரயில்வே நடைமேடைகளைத் தொடர்ந்து கண்காணித்து கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' எனக் கூறினர்.
இதையும் படிங்க:ரூ.20 லட்சம் கோடியல்ல, வெறும் ரூ.4 லட்சம் கோடிதான் - கபில் சிபல் தாக்கு