ஜெய்ப்பூர்: கடந்த நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதியில் 199 தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 3 அன்று எண்ணப்பட்ட வாக்குப்பதிவின்படி, 115 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேநேரம், 69 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. மேலும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க, பாஜகவின் மத்திய பார்வையாளர்களான, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தவ்டே ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதன்படி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பஜன் லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக சட்டமன்ற ஆலோசனைக் குழு அறிவித்தது. அது மட்டுமல்லாமல், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக வித்யாதர் நகர் சட்டமன்ற உறுப்பினர் தியா குமாரி மற்றும் துடு சட்டமன்ற உறுப்பினர் பிரேம் சந்த் பைரவா ஆகியோரும், ராஜஸ்தான் சட்டசபையின் சபாநாயகராக அஜ்மர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வசுதேவ் தேவனானியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.