ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பேகம்பேட்டில் சர்வதேச கூரியர் சேவை மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 3.1 கிலோ போதைப்பொருளை ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்ததாக தெரிகிறது.
இந்த சர்வதேச கூரியர் நிறுவனங்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு ஆயிரம் முதல் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியிருக்கலாம் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். சர்வதேச கூரியர் நிறுவனங்களின் உதவியுடன், விமான நிலைய ஸ்கேனர்களில் சிக்காமல், சுங்கத்துறையினரின் கண்களில் படாமல் போதைப்பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் பெரிய கடத்தல்காரர்கள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரைச் சேர்ந்த சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். போதைப்பொருளை கூரியர் நிறுவனங்கள் மூலம் கடத்த முயன்றவர்கள், போலி ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர். அவர்களது செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த காதர் மொய்தீன், இப்ராகிம் ஷா ஆகியோரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் கிராமத்தில் ஏராளமானோர் கடத்தலில் ஈடுபடுவதாகவும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்தனர். கோவாவைப் போல இந்த கிராமம் போதைப்பொருள் மையமாக செயல்படுவதாகவும், இந்த சம்பவங்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டு போலீசில் சிக்கிக் கொள்பவர்கள் ஜாமீனில் வெளியே எடுக்கப்படுவார்கள் என்றும், இது ஒரு நெட்வொர்க் போல செயல்படுகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Venugopal Dhoot: ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கில் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் கைது!