சென்னை : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டனுமான எம்.எஸ் டோனி, சென்னையில் நேற்று (ஏப். 2) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். டோனியுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசனுடன், டோனி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய டோனி, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறுவதற்கு முந்தைய 15 முதல் 20 நிமிடங்கள் தன் வாழ்நாளில் சிறந்த தருணம் மற்றும் உணர்வு எனக் கூறினார்.
மேலும், போட்டி முடிவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதது தனது சிறந்த தருணம் என டோனி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மைதானம் முழுவதும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் வந்தே மாதரம் என பாடியது மறக்க முடியாதது என்றும், அதுபோன்ற ஒரு தருணத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றும் கூறினார்.
அதேநேரம் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் நினைத்தால் அது போன்ற ஒரு தருணத்தை உருவாக்க முடியும் என்றார். அதற்கு ஏற்றார் போல் மைதானமும், ரசிகர்களும் கூடினால் 2011 ஆம் ஆண்டு தான் சந்தித்த இனிய தருணத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியும் என்று அவர் கூறினார்.
மைதானத்தில் திரளும் 40, 50 அல்லது 60 ஆயிரம் ரசிகர்கள் ஒன்றிணைந்து பாடும் போது 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த தருணத்தை மீண்டும் கொண்டு வர முடியும் என கேப்டன் டோனி தெரிவித்தார். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு போட்டியில் வெற்றி பெற்ற தருணத்தில் தனக்குள் எந்த உயர்வும் ஏற்படவில்லை என்றும் வெற்றி பெற வேண்டும் என்ற எழுச்சி மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார்.