கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில் பலரது தொழில்களும் முடங்கியுள்ளது. பலரும் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை தலைவிரித்தாடுகிறது. ஆனால் இத்தகைய பொருளாதார சூழலிலும் சிலர் இதற்கு நேரெதிராக தங்களது வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ண்து உத்வேகம் அளித்து வருகின்றனர்.
அத்தகைய மனிதர்களில் ஒருவர் தான் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ். 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம், ராமச்சந்திரபூர் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்துள்ளார். ஆனால், நல்வாய்ப்பாக வேளாண்துறை அலுவலர் ஒருவரின் மூலம் முட்டை பொரிக்கும் இயந்திரத்தை அறிய வந்து அதன் மூலம் தற்போது சிறு வியாபாரியாக உருவெடுத்துள்ளார்.
மனீஷ், வேலையிழந்து கடும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சுபிர் தாஸ் எனும் வேளாண்துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவரது உதவியுடன் முட்டை பொரிக்கும் இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக மனீஷ் கண்டறிந்த நிலையில், இன்று இந்த இயந்திரமே அவரது தன்னம்பிக்கைமிக்க சுய சார்பு வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளது.