ஆந்திரப் பிரதேசம்:திருப்பதி சந்நிதானம் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற முக்கிய பக்தி ஸ்தலமாகும். ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் இந்த சந்நிதானத்திற்கு வருகை தருவது வழக்கம். அரசியல் ஆளுமைகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளென அனைவரும் வருகை தரக்கூடிய கோயிலாக, திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயில் இருந்துவருகிறது.
இந்தக்கோயிலில் பல்வேறு சிறப்புகளும், சிறப்பு தரிசனங்களும் உண்டு. இந்நிலையில், இன்று(செப்.16) திருமலை - திருப்பதி சந்நிதானத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கோயிலின் முக்கிய சிறப்பு தரிசனத்தில் ஒன்றான ‘நிஜபாத’ தரிசனம் கிடைத்தது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் கிடைக்கும் இந்த தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். மேலும், இந்த தரிசனத்தில் கலந்துகொள்ள மக்கள் தேவஸ்தானத்தில் கட்டணம் அளிக்க வேண்டும். எப்போதும் கோயிலில் உள்ள மூலவரான ஏழுமலையானின் பாதங்கள் நகைகளாலும்; துளசி இலைகளாலும் மூடி அலங்கரித்தே இருக்கும்.
ஆனால், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே சாமியின் பாதங்கள் எந்த வித ஆபரணங்களும், துளசிகளுமின்றி காணப்படும். இதற்குப்பெயர் தான் ‘நிஜபாத’ தரிசனம். இந்த தரிசனத்தைக் கண்டால் சாமி நம்முள் உள்ள நோய்நொடி, பிரச்னைகள் என அனைத்தையும் அகற்றி, நம்முள் நன்மையை விதைப்பார், என்பது நம்பிக்கை.