கொல்கத்தா: பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த தலைவருக்கான தேர்தல் போட்டி அக்-18 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் அக் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். இந்த மனுக்கள் மீதான இறுதி முடிவு அக்-13 ஆம் தேதி வெளியிடப்படும்.
இந்த தேர்தலில் பிரபலங்களின் வாரிசுகள் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பிசிசிஐ பொதுக் கூட்டத்தில் ராஜஸ்தான் சார்பாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட்டின் மகன் வைபவ் கெலட் பங்கேற்க உள்ளார். முன்னாள் பிசிசிஐ அதிகாரி நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெய்தேவ் ஷா சவுராஷ்டிரா சார்பாகவும், முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகரின் மகன் அத்வைத் மனோகர் விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் சார்பாகவும் போட்டியிட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பரோடா கிரிக்கெட் சங்கம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவர் சிராயு அமீனின் மகன் பிரணவ் அமீனும் இதில் பலம் காண உள்ளார். இறுதியாக முன்னாள் மத்திய அமைச்சரும் பிசிசிஐ முன்னாள் துணை தலைவருமான அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இதற்கிடையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) அதன் செயலாளர் சந்தோஷ் மேனனுக்குப் பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னியை களமிறக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜெய் ஷா (குஜராத் கிரிக்கெட் சங்கம்), அனிருத் சவுத்ரி (ஹரியானா கிரிக்கெட் சங்கம்), அருண் சிங் துமல் (ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம்) போன்ற பிரபலமான முகங்கள் அனைவரும் அந்தந்த மாநில சங்கங்கள் சார்பாக களம் காண உள்ளனர்.
இதையும் படிங்க:அரசு பள்ளிக்குள் சமாதி (மசார்) கட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்