சாமோலி (உத்தரகண்ட்): பகவான் விஷ்ணு கோயில் கொண்டுள்ள பத்ரிநாத் ஆலயம் இன்று திறக்கப்படுகிறது. கோயில் திறப்பை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் சார்தார் யாத்திரையின் கீழ் வரும் ஒரு கோயிலாகும். சார்தாம் யாத்திரை (நான்கு கோயில் யாத்திரை) ஆலயங்களில் யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் கேதார்நாத் ஆகியனவற்றுடன் பத்ரிநாத் ஆலயமும் ஒன்றாகும்.
இந்த நிலையில் சார்தாம் யாத்திரை மே3ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, கேதார்நாத் ஆலயம் வெள்ளிக்கிழமை (மே6) நடை திறக்கப்பட்டது. அதேபோல் உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்கள் மே3ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டன.
தொடர்ந்து பத்ரிநாத் ஆலயம் இன்று (மே8-ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. பத்ரிநாத் ஆலயம் இன்று திறக்கப்படும் நிலையில், ஆலயம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரையின்போது பத்ரிநாத் ஆலயத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் யாத்ரீகர்கள் பத்ரிநாத் ஆலயத்துக்கும், 12 ஆயிரம் பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்துக்கும், 7 ஆயிரம் பேர் கங்கோத்ரி ஆலயத்துக்கும் 4 ஆயிரம் நபர்கள் யமுனோத்ரி ஆலயத்துக்குள்ளும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஏற்பாடுகள் 45 நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு கோவிட் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம். சார்தாம் யாத்திரையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: பனிப்பொழிவு - பரவசமாக காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்