திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீவராஹம் பகுதியைச்சேர்ந்த அனூப் என்பவருக்கு, ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. மலேசியாவுக்குச் சமையல்காரராகப் பணிக்கு செல்ல திட்டமிட்டிருந்த இவருக்கு, லாட்டரி அடித்ததால் வெளிநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.
தனது மகளின் உண்டியல் சேமிப்பை வைத்தே அந்த லாட்டரி சீட்டை வாங்கியதாக அனூப் தெரிவித்தார்.
இதுகுறித்து அனூப் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். கடந்த காலங்களில் நூறு ரூபாய் முதல் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வரை வென்றுள்ளேன். இந்த முறை எனக்கு லாட்டரி அடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், நான் முதலில் எடுத்த லாட்டரிச்சீட்டு இது இல்லை. முதலில் எடுத்ததை வேண்டாம் என விட்டுவிட்டு, மற்றொன்றை எடுத்தேன். இரண்டாவதாக எடுத்த சீட்டுக்குத்தான் பரிசு கிடைத்துள்ளது.