புர்ணியா:டெல்லியில் நிர்பயா பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான கோர நிகழ்வு பீகாரில் அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம், பூர்ணியா பகுதியில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரிக்கு சென்று கொண்டு இருந்த பேருந்தில் பெண் பயணித்துள்ளார்.
தொடக்கத்தில் அதிகளவு கூட்டம் பேருந்தில் காணப்பட்ட நிலையில், நிலையங்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்துள்ளது. இறுதியில் அப்பெண் மற்றும் 5 இளைஞர்கள் பேருந்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேரம் செல்ல செல்ல பேருந்தில் இருந்த இளைஞர்கள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பெண்ணிடம் ஆபாசமான முறையில் சைகைகளை இளைஞர்கள் காண்பித்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அத்துமீறிய இளைஞர்கள் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. இளைஞர்களின் அநாகரிக செயல் குறித்து பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சம்பவத்தைக் கண்ட பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இளைஞர்களை தட்டிக்கேட்காமல் தொடர்ந்து பேருந்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இளைஞர்களின் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட முயன்றதை அடுத்து, பேருந்தின் ஜன்னல் வழியாக பெண் வெளியே குதித்துள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து, கீழே குதித்ததால் அவருக்கு கை, கால் என உடலின் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.