போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் மேம்பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் பேருந்து கவிந்த விபத்தில் 15 பேர் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த 25 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மீர்சிங் கூறிய தகவலின் படி, "செவ்வாய்கிழமை காலை, ஊன் காவல் எல்லைக்கு உட்பட்ட தசங்கா பகுதியின் டோங்கர்கான் மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் பயணம் செய்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச மாநில அரசு, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் அறிவித்துள்ளது.