தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

PUNJAB POLLS: பஞ்சாபில் பாஸாகுமா காங்கிரஸ்; உ.பி.,யில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - 5 State Election

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (பிப். 20) நடைபெறுகிறது. மேலும், மூன்றாவது கட்டமாக உத்தரப் பிரதேசத்தின் 59 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

PUNJAB POLLS
PUNJAB POLLS

By

Published : Feb 20, 2022, 8:06 AM IST

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி ஜனவரி 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோவாவின் 40 தொகுதிகளிலும், உத்தரகண்டின் 70 தொகுதிகளிலும் பிப். 14ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிப். 10, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

பல்முனை போட்டி

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேலும், மூன்றாவது கட்டமாக உத்தரப் பிரதேசத்தின் 59 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

மூன்று வேளாண் சட்டங்களால் பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் எழுந்த எழுச்சி, கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸின் உட்கட்சி பூசல்கள் என பஞ்சாப் தேர்தல் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி அகாலி தளம் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி, பாஜக - பஞ்சாப் லோக் காங்கிரஸ் - சிரோண்மணி அகாலி தளம் (சன்யுக்த்) என பல்முனை போட்டி நிலவுகிறது.

பரபரப்பில் பஞ்சாப்

மொத்தம், 117 தொகுதிகளில் 2.14 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 24,740 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2,013 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

முக்கிய வேட்பாளர்களான முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரித்சர் தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் பாட்டீயாலா தொகுதியிலும், போட்டியிடுகின்றனர். மேலும், சிரோண்மணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், லம்பி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது மருமகன் பிக்ரம் சிங் மஜிதியா, நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பக்வாந்த் மாண் தூரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதில், ஆம் ஆத்மி 20 தொகுதிகளிலும், சிரோண்மணி அகாலி தளம் - பாஜக கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை உள்ளடக்கிய சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா அமைப்பும் இந்த தேர்தலில் பங்கெடுக்கிறது.

பஞ்சாப் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: நம்மகிட்ட வேணாம் மகனே; ஏனா நாங்க உங்களுக்கெல்லாம் 'அப்பன்'! - சிவசேனா எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details