டெல்லி : யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அரியானா மாநிலம் ஹத்தின்குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வருகிறது. இமாச்சல பிரதேசம், டெல்லி, அரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. விடாது கொட்டித் தீர்த்த கனமழையால் முக்கிய நகரங்கல் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
அரியானாவில் கொட்டித் தீர்த்த் கனமழையால் யமுனை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஹத்திப்குண்ட் தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டு உள்ள நிலையில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டு உள்ளது.
யமுனை நதிக் கரையில் உள்ள தலைநகரின் நகரங்கள் தத்தளித்து வருகின்றன. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி உள்ளது. இதனிடையே யமுனை ஆற்றில் நீர் திறப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், யமுனை ஆற்றின் நீர் மட்டத்தை உறுதி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் எப்போதும் இல்லாத அளவில் 207 புள்ளி 55 மீட்டர் நீர் பாய்ந்து வரும் நிலையில், மேற்கொண்டு நீர் மட்டம் அதிகரித்தால் தலைநகருக்கு மோசமான நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில வாரங்களில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதை குறிப்பிட்டு அரியானாவில் உள்ள ஹத்தின்குண்ட் தடுப்பணையில் இருந்து யமுனை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை மிதமான வேகத்தில் கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நீர் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் 207 புள்ளி 72 மீட்டரை எட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் இது கடுமையான மற்றும் கவலை அளிக்கக் கூடிய விசயம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. யமுனையின் நீர்மட்டம் மேலும் உயராமல் இருக்க, ம ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீரை குறைந்த வேகத்தில் திறந்துவிட வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், கடந்த 1978 ஆம் ஆண்டு யமுனை ஆற்றில் அதிகபட்ச கொள்ளளவான 207 புள்ளி 49 மீட்டர் இருந்த நிலையில் தற்போது அந்த அளவையும் தாண்டி 207 புள்ளி 55 மீட்டராக நீர் பாய்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?