மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியை ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பஞ்சாயத்து தொடர் கதையாக நீடித்து வருகிறது. அங்கு குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றுவது குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்தது. இதனால் டெல்லியை அளும் ஆம் ஆத்மி அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சுமூக உறவு நீடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வலியுறுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசின் ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் செய்வது, அதிகாரிகளை மாற்றம் செய்வது ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு தான் முழு அதிகாரம் இருப்பதாக கூறி உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.