தேஷ்பூர்:அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் உள்ள டிராங் என்ற பகுதிக்கு அருகில் சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று (மார்ச் 16) காலை விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு பைலட், ஒரு மூத்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது குழுவினர் இருந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கு உள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் ரேடார் சிக்னல் இன்று காலை 9.15 மணியுடன் தடை பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்குச் சென்ற ராணுவப் படையினர், தேடுதல் பணியைத் தொடங்கி உள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் அருணாச்சலப்பிரதேச காவல் துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநிலத்தில் உள்ள மண்டாலா பகுதியில் இருந்து புகை வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டாலா என்னும் பகுதி, டிர்ராங் என்ற இடத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில், லெப்டினண்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஏ ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக வெஸ்ட் காமெங் மாவட்டத்தின் டிஎஸ்பி பாரத் ரெட்டி, ஈடிவி பாரத் செய்திகளுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு டிர்ராங் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், நாளை (மார்ச் 16) டிர்ராங் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தின்போது வானிலை மோசமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் 100 புத்தா ஸ்தூபிகள் மண்டாலா பகுதியில் உள்ளது. இன்றைய நாள் நிகழ்ந்த இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தோடு சேர்த்து, கடந்த 6 மாத காலத்தில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் விபத்தினை சந்தித்துள்ளன. முன்னதாக கடந்த 2022 அக்டோபர் 21ஆம் தேதி, அம்மாநிலத்தில் உள்ள உப்பர் சியாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் (Advanced Light Helicopter) ஒன்று விபத்துக்குள்ளானது.