அமெரிக்கா:அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அமெரிக்காவில் உள்ள இருபெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இரு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் குடியரசுக் கட்சியை சார்பில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேபோல், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன், ராபர்ட் கென்னடி உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடியரசு கட்சியை சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஹிர்ஷ் வர்தன் சிங் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் தொழிலதிபருமான சிவா அய்யாதுரை அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சிவா அய்யாதுரை, "அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட இருக்கிறேன். இடது, வலது என்பதைக் கடந்து அமெரிக்க மக்களுக்கு தேவையை அறிந்து அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி செய்தால் அமெரிக்கா மேலும் சிறப்பானதாக மாறும். நாங்கள் இந்தியாவில் சாதி ரீதியாக தாழ்ந்தவர்களாக தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டோம். அதனால், கடந்த 1970ஆம் ஆண்டு இந்தியாவின் சாதி அமைப்பை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவா அய்யாதுரை மும்பையில் பிறந்த தமிழர். தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். இவர் தனது 14 வயதில் மின்னஞ்சலை கண்டுபிடித்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதற்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என சிவா அய்யாதுரை கூறியுள்ளார். தற்போது இவர் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தி வருகிறோர். கடந்த ஆண்டு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல்... 35 பேர் பலி, 200 பேர் படுகாயம்!