ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை பகுதியில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் இந்திய, பாகிஸ்தான் நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐநா பொதுச் சபை கூட்டத்தின் தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் - ஐநா வரவேற்பு!
14:40 February 26
இந்திய, பாகிஸ்தான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ள நிலையில், அதற்கு ஐநா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் குட்டெரெஸ் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையிலான இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தின் கூட்டறிக்கையால் ஐநா பொதுச் செயலாளர் ஊக்கமடைந்துள்ளார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமையும் என அவர் நம்புகிறார்" என்றார்.
பேச்சுவார்த்தை குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் பேச உள்ளீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "அதுகுறித்த எந்த திட்டமும் இல்லை. ஆனால், உறுப்பு நாடுகள் கோரிக்கை விடும் பட்சத்தில், பொதுச் செயலாளர் அதற்கு எப்போதும் உடன்படுவார்" என்றார்.
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மனமார வரவேற்பு தெரிவிப்பதாக போஸ்கிரின் செய்தித் தொடர்பாளர் பிரெண்டன் வர்மா தெரிவித்துள்ளார்.