டெல்லி :முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து ஆந்திர பிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் 300 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தரப்பில், 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் வலது கண்ணில் சிகிச்கை அளிக்க வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி மீண்டும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சந்திரபாபு நாயுடுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியும், வரும் நவம்பர் 24ஆம் தேதி மீண்டும் சரணடைய உத்தரவிட்டும், மருத்துவமனையில் கண் சம்பந்தமான சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியும், வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.