அமராவதி:ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் சிட்வேலை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ஜெய்ஷ்வா, உடல்நலக்குறைவு காரணமாக திருப்பதியில் ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
அவரது உடலை திருப்பதியிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள சிட்வேலுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளனர். இந்த தொகையை கட்ட முடியாத தந்தை, சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில் உறவினர்கள் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து ரூயா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அந்த ஆம்புலன்சை மருந்துவமனை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. அதோடு, மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து இலவச ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.
இதனால், அந்த தந்தை தனது மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் ஆந்திராவில் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைக்கு உத்தரவு!