அமராவதி: மார்கதர்சி சிட் ஃபண்ட் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரிய அனைத்து காவல்துறை நோட்டீஸ்களையும் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. முன்னதாக, சிராலா, விசாகா, சீதம்பேட் ஆகிய கிளைகளின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு மார்கதர்சி கிளை மேலாளர்களுக்கு ஆந்திரப் பிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து, மேலாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து அனைத்து நோட்டீஸ்களையும் நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்கதர்சி சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரண் ஆகியோருக்கு எதிராக யூரி ரெட்டி என்பவர் போலியான முறையில் பங்குகளை மாற்றியதாகக் கூறிய புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் மாநில சிஐடியின் அதிகார வரம்பு குறித்து நீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன், சிஐடி பதிவு செய்த வழக்கின் அனைத்து நடவடிக்கைகளையும் 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல் இந்த வழக்கிலும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“சிட் உறுப்பினர்கள் உறுதிசெய்யப்பட்ட பிறகு, எங்கள் சந்தாதாரர்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்காக, ஆந்திரப்பிரதேச சிஐடி, மார்கதர்சியின் வணிகத்தையும் அதன் வாடிக்கையாளர் நெட்வொர்க்கையும் சேதப்படுத்தும் தீய நோக்கத்துடன் அலைந்து திரிந்து விசாரணைகளைத் தொடர்கிறது” என்று நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மார்கதர்சி பங்குகளை மாற்றிய வழக்கு: 8 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்!