அமராவதி: மார்கதர்சி சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் (Margadarsi Chit Funds Pvt. Ltd - MCFPI) தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரண் ஆகியோர் தன் குடும்ப பங்குகளை போலியாக மாற்றியதாக யூரி ரெட்டி என்பவர் ஆந்திர சிஐடியில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரில் சிஐடி வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராமோஜி ராவ் மற்றும் ஷைலஜா கிரண் ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த ஆந்திர பிரததேச உயர் நீதிமன்றம், ஆந்திரா சிஐடியின் அதிகார வரம்பு குறித்து கடும் ஆட்சேபனையை எழுப்பி வழக்கு மீதான சிஐடி விசாரணைக்கு எட்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததாக புகார்தாரர் கூறியநிலையில் ஆந்திராவில் எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என ஆந்திரா சிஐடியிடம் சிபிஐ கேள்வி கேட்டது.
குறிப்பாக, "ஹைதராபாத்தில் வாங்கிய நகை அங்கு திருடப்பட்டால், அது விஜயவாடாவில் சம்பாதித்த பணத்தில் வாங்கியது என்பதற்காக விஜயவாடாவில் எப்படி வழக்குப் பதிவு செய்வது?" என்று ஆந்திர சிஐடியை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் கேட்டது. இந்தக் காரணங்களால், சிஐடி பதிவு செய்த வழக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.எல்.என்.சக்கரவர்த்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
தனது தந்தை ஜி.ஜகந்நாத ரெட்டியிடம், பதிவு செய்யப்பட்ட 288 பங்குகளை மார்கதர்சி நிர்வாக இயக்குநருக்கு மாற்றியதாக யூரி ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் மார்கதர்சி சிட் ஃபண்ட் தலைவர் ராமோஜி ராவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரண் ஆகியோர் மீது மங்களகிரி சிஐடி போலீசார் அக்டோபர் 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
ராமோஜி ராவ், ஷைலஜா கிரண் இருவரும் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த்த லுத்ரா, நாகமுத்து, போசானி வெங்கடேஸ்வரலு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
"யூரி ரெட்டியின் பங்குகளை வாங்கியதற்காக, மார்கதர்சி நிறுவனம் அவருக்கு காசோலையாக பணம் கொடுத்தது. புகார்தாரர் அந்த பங்குகளை மார்கதர்சி நிறுவனத்திற்கு மாற்ற கையெழுத்திட்டார். ஆனால் யூரி ரெட்டி காசோலையை பணமாக்கவில்லை என்று நிறுவனங்களின் பதிவாளரிடம் (Registrar of Companies) புகார் செய்தார். அந்த புகார் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ஆந்திரா சிஐடியில் புகார் அளித்துள்ளார். அவரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் ராமோஜி ராவ் தங்கள் பங்குகளை வாங்கியதற்கு நன்றி என யூரி ரெட்டி 2016 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மார்கதர்சி நிறுவனம் ஹைதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்கு பரிமாற்றம் அங்கு நடந்தது.
புகார்தாரரின் குற்றச்சாட்டின்படி ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க என்ன அதிகார வரம்பு உள்ளது. ஆந்திரா சிஐடியின் எல்லைக்குள் இல்லாததால், இந்த வழக்கை தெலங்கானாவுக்கு மாற்ற வேண்டும். பங்கு பரிமாற்றத்திற்கும் மார்கதர்சி நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பங்கு பரிமாற்ற நடைமுறை நடந்தபோது அவர் இல்லை.பங்கு பரிமாற்றத்திற்குப் பிறகு யூரி ரெட்டி நிறுவனத்திடம் இருந்த பங்குகள் ஷைலஜா கிரண் பெயருக்கு மாற்றப்பட்டன. எப்.ஐ.ஆரிலும் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. புகார் தாக்கல் செய்ய தாமதமானதற்கான காரணங்களை புகார்தாரர் குறிப்பிடவில்லை” என்று மார்கதர்சி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, சிஐடி பதிவு செய்த வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். சிஐடி தரப்பில் வழக்கறிஞர் சிவகல்பனா ரெட்டி பேசுகையில், “மனுதாரர்கள் எப்ஐஆரை பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த நிலையில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது. நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், கவுன்டர் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு தங்கள் வரம்புக்கு வராது என்று சிஐடி முடிவு செய்தால், அது தெலங்கானாவுக்கு மாற்றப்படும்” எனக் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியும் என்று நீதிபதி சக்கரவர்த்தி பதிலளித்தார். விசாரணைக்குப் பிறகு, சிஐடி பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில், விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 8 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராகுல் காந்தி வாக்குறுதி!