அமராவதி: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - பால்சா விரைவு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரு ரயில்களின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயநகர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். கண்டகப்பள்ளியில் ரயில் விபத்துக்குள்ளானதற்கு அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆந்திர முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.