அமராவதி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிடெக் படித்து வந்த மாணவி நல்லபு ரம்யா. இவரை குஞ்சலா சசிகிருஷ்ணா என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி சொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரம்யாவுக்கு இதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. இருப்பினும் சசிகிருஷ்ணா ரம்யாவை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தாக கூறப்படுகிறது.
ரம்யா காதலை ஏற்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சசிகிருஷ்ணா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, ரம்யாவை பின்தொடர்ந்து குண்டூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ரம்யாவை கத்தியால் பலமுறை குத்தி தப்பிச் சென்றார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திஷா சட்டத்தின் கீழ் நடவடிக்கை: ரம்யாவின் தந்தை அளித்த புகாரில் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் நர்சராவ்பேட்டை அருகே உள்ள மொலக்லுரு கிராமத்தில் சசிகிருஷ்ணாவை கைது செய்தனர். தடயவியல் நிபுணர் குழு இரண்டு நாட்களில் டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட சசிகிருஷ்ணா மீது ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றம்புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் ஆந்திர மாநில திஷா சட்டத்தின் கீழ் வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டு, நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டது.