தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி..? காட்டுக்குள் கல்யாணம் நடத்த முயற்சி.. சினிமாவை மிஞ்சும் பகீர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்தி கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டனர்.

Marriage issue
கட்டாய திருமணம்

By

Published : Jun 6, 2023, 6:18 PM IST

ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே உள்ள மோகன்கார் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு வரும் 12ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெண் வீட்டார் திருமணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். அழைப்பிதழ் அச்சடித்தல், சீர்வரிசை பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட பணிகளில், பெண் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தான், இளம்பெண்ணை கடத்திய நபர் கட்டாய திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த 1ம் தேதி இளம்பெண் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, புஷ்பேந்திரா என்பவரது தலைமையில் 12 பேர் கொண்ட கும்பல், இளம்பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார், வெளியே செல்லுமாறு எச்சரித்தனர்.

ஆனால் அதை கேட்காத கும்பல், மணப்பெண்ணை வற்புறுத்தி காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற புஷ்பேந்திரா, கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காடு போல் இருக்கும் பகுதியில், புற்களை தீ வைத்து கொளுத்தி இளம்பெண்ணை தூக்கியபடி சுற்றிவந்துள்ளார் புஷ்பேந்திரா. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பொதுவாக இந்து மத முறைப்படி நடக்கும் திருமணங்களில், மணமக்கள் அக்னியை சுற்றி வருவது வழக்கம். அதேபோல், இளம்பெண்ணை சுமந்தபடி புஷ்பேந்திரா தீயை சுற்றி வந்துள்ளார். அதற்குள் அங்கு விரைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், புஷ்பேந்திராவும், அவரது கூட்டாளிகளும் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டினர். பின்னர் கட்டாய திருமணம் குறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன், இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புஷ்பேந்திராவை கைது செய்தனர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெய்சால்மர் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண்ணின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

இதற்கிடையே, கட்டாய திருமணம் செய்ய முயன்றது தொடர்பான வீடியோவை, டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் டேக் செய்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மதுபோதையில் வன்கொடுமை செய்ய முயன்ற சகோதரரை கொலை செய்த பெண்.. குஜராத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details