மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை மூன்று கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
கடந்த மார்ச் 27ஆம் தேதி அம்மாநிலத்தின் 30 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 1ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதி உள்பட 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி, மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் 31 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது.
இதுவரை மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை (ஏப்.10) அம்மாநிலத்தில் மேலும் 44 தொகுதிகளில் நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நேற்றுடன் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக தேர்தல் நடைபெறும் பிற தொகுதிகளில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.09) பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இன்று அம்மாநிலத்தில் நடைபெறும் நான்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், 2016ஆம் ஆண்டு மம்தா போட்டியிட்டு வென்ற பபானிபூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜகத்டல், மத்யம்கிராம் பகுதிகளில் அமித் ஷா தலைமையில் பேரணிகளும் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க:'ரஷ்யாவுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்'