மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜன.30) மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள மம்தா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பரப்புரைக்காக கொல்கத்தா மற்றும் நாடியா ஆகிய பகுதிகளுக்கு அமித் ஷா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த பயணம் திடீரென்று ரத்து செய்யபட்டுள்ளது.
திடீர் ரத்துக்கான பின்னணி
தலைநகர் டெல்லி கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.
அதேபோல, நேற்று மாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதையடுத்து டெல்லியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இந்த பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே அமித் ஷா தனது மேற்கு வங்கப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதையும் படிங்க:'எங்களைப் போல பலர் பாஜகவில் இணைவார்கள்'- நமச்சிவாயம்