ஐதராபாத் :தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு 52 வேட்பாளர் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலங்கான சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியும், அதேநேரம் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் போட்டி போடுகின்றன.
இதனால் தெலங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை கைப்பற்ற 60 இடங்கள் பெரும்பான்மையாக கருதப்படும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
தெலங்கானா மாநிலம் தொடங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார். இதனால் இம்முறை மக்கள் மாற்றத்திற்கான அரசியலை தேடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக கட்சிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 55 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. அடுத்தடுத்த வேட்பாளர்கள் பட்டியலை வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தரப்பில் முதற்கட்டமாக 52 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. ராஜா சிங், கோஷாமஹால் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜா சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாததற்கு காரணம் தெரிவிக்கக் கோரி பாஜக மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மாநில பாஜக பொதுச் செயலாளர் பந்தி சஞ்சய் கரீம்நகர் தொகுதியிலும், தர்மபுரி அரவிந்த் கொருதலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் நகுநந்தன் ராவ், எடலா ராஜேந்தர் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எடலா ராஜேந்தர் ஹுசாராபாத் மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதில் கஜ்வெல் தொகுதியில் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஜாம்பாத் எம்.பி தர்மபுரி அரவிந்த் கொர்துலா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 8 இடங்களும், எஸ்.டி வகுப்பினருக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்றபடி பிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 19 தொகுதியும், ரெட்டி சமூதாயத்தை சார்ந்தவர்களுக்கு 12 இடங்களும் வேலம்மா சமூகத்தினருக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட எம்.எல்.ஏவின் இடைநீக்கம் ரத்து! தெலங்கானா தேர்தலையொட்டி பாஜக சூட்சமம்!