ஆந்திரப் பிரதேசம்:முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணைச் சந்தித்து பேசினார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி ஜனசேனா கட்சி அலுவலகத்தில், ராயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளர். அம்பதி ராயுடு சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.
அம்பதி ராயுடு குண்டூர் அல்லது பல்நாடு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஜனசேனா உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அம்பதி ராயுடு ஊடகத்தினரைச் சந்திக்காமல் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அம்பதி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “நான் முழு மனதுடன் ஆந்திர மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்தேன். நான் எனது கனவை நிறைவேற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். நான் பல கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்னைகளை அறிந்து கொண்டு, அதனை சரி செய்ய என்னால் முடிந்த பல உதவிகளை செய்தேன். ஆனால், ஒரு சில காரணங்களால் எனது கனவுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. எனது கொள்கையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஒத்து போகவில்லை.
அதற்கு அவர்களை குறை கூற விரும்பவில்லை. அதனால் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தேன். எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அரசியலில் இருந்து விலக முடிவெடுக்கும் முன்பு, பவன் கல்யாணைச் சந்தித்து ஒரு முறை பேசும்படி அறிவுரை கூறினர். ஆகையால், பவன் கல்யாணைச் சந்தித்து அவருடன் வாழ்க்கை, அரசியல் குறித்து பல மணி நேரம் விவாதித்தேன்.