டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று (செப்.17) நடைபெற்றது.
தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட எதிர்கட்சிகளைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாட்டில் இருந்து வைகோ, திருச்சி என்.சிவா, கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வி.சிவதாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். அதற்கு மறுநாள் (செப் 19) பழைய நாடாளுமன்ற வளாகத்தில் புகைப்பட நிரல் உள்ளது. அதன் பிறகு அன்று காலை 11 மணியளவில் மத்திய ஹாலில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.
இதனையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம். எனவே, நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செப்டம்பர் 19 முதல் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறத் தொடங்கும். பின்னர், செப்டம்பர் 20 முதல் அரசின் வழக்கமான வேலைகள் அனைத்தும் புதிய நாடாளுமன்றத்திலே செயல்படத் துவங்கும்” எனத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை (செப்.13) மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் முன்பு செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொருக்கு முன்பு, செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தனது "X" பக்கத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவிட்டு இருந்தார்.