மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.
அதேபோல, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் களத்தில் தொடர்ந்து பனிப்போர் நிலவிவருகிறது. பல்வேறு விவகாரங்களில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் ஆளும் அரசின் மீதும் ஆளுநர் ஜகதீப் தங்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி இன்று (ஜன. 09) ஆளும் அரசை ஆளுநர் ஜகதீப் தங்கர் விமர்சித்துள்ளார்.
ஊடகங்களிடையே பேசிய ஆளுநர் ஜகதீப் தங்கர், “ஆட்சி அரசியலமைப்பின் பாதையிலிருந்து விலகிச் செல்கிறது. அரசு கிட்டத்தட்ட பற்றி எரியும் நிலையில் உள்ளது. மேற்கு வங்க தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் போன்ற உயர் அலுவலர்களிடம் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எனக்கு விளக்குமாறு கடந்த இரண்டு மாதங்களாக அறிவுறுத்திவருகிறேன். ஆனால் அவர்கள் அது குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.