டெல்லி: பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட "India: The Modi Question" என்ற ஆவணப்படம் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதில் குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து ஆதாரங்களுடன் பேசப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த ஆவணப்படத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆவணப்படத்தில் நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த உண்மைகளைத்தான் பிபிசி கூறியுள்ளது என வரவேற்பு தெரிவித்தனர். இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்பட விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனிடையே பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான அனில் ஆண்டனி நேற்று(ஜன.24) மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், பாஜகவுடன் தனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்களைப் பற்றி நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி சேனலின் ஆவணப்படத்தை இந்தியர்கள் ஆதரிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணம் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.