உதய்பூர் : நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி வெடித்ததாக கூறப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் Air India flight 470 என்ற விமானம் நண்பகல் 1 மணி அளவில் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த நிலையில், திடீரென பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி வெடித்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் ஏறத்தாழ 140 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தாபோக் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகள் உடனடியாக கீழ் இறக்கப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர். பயணியின் செல்போன் பேட்டரி தான் வெடித்தது என பாதுகாப்பு படையினர் தெரிவித்த நிலையில், விமானம் மீண்டும் டெல்லி நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. என்ன காரணத்தினால் பயணியின் செல்போன் வெடித்தது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.