டெல்லி: இந்திய கால்பந்து நிா்வாகத்தில் 3ஆம் தரப்பு தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டிய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ) அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாலம் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை போட்டிக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தடைக் காலத்தின்போது இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்ந்த போட்டி நிர்வாகிகள், வீரா், வீராங்கனைகள் யாரும் ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) சாா்ந்த போட்டிகளோ, பயிற்சிகளோ பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ), ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த கடிதத்தில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாகவே ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஒரு அணியுடனும், மற்றொரு அணியுடனும் வரும் 23, 26 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. இதே போல ஏடிகே மோகன் பஹான் அணி செப்டம்பர் 7ஆம் தேதி பஹ்ரைனில் ஆசிய கால்பந்து சம்மேளன போட்டியில் விளையாடவுள்ளது.
ஆகவே இந்த அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதோடு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.