லக்னோ :2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்திய போதிலும் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனிடையே இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாயா யாத்திரையில் களமிறங்கி உள்ளார். அதே நேரம், பாஜகவும் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று (ஜன. 15) அறிவித்தார்.