ஆக்ரா:உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சிக்கந்திரா காவல் நிலையத்திற்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் உதித் பஜாஜ்(46) - அஞ்சலி பஜாஜ் (40) தம்பதியினர் வசித்து வந்தனர். உதித் பஜாஜ் ஷூ லேஸ் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் வயதில் மகள் இருக்கிறார்.
இவர்களது மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரகார் குப்தா(20) என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரகார் குப்தா சிறுமியை விட வயதில் மிகவும் மூத்தவர் என்றும், சிறு வயதில் காதல் எல்லாம் வேண்டாம் என்றும் தாய் அஞ்சலி சிறுமியை கண்டித்ததுள்ளார். ஆனால், இதனை கேட்காமல் சிறுமி தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதை அறிந்த தாய் அஞ்சலி, சிறுமியின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் சாட்கள், சமூக வலைதளங்கள் என அனைத்தையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். அதேபோல், காதலன் பிரகார் குப்தாவிடம் பேசக்கூடாது, அவரை சந்திக்கக்கூடாது என்றும் கண்டிப்பாக கூறியுள்ளார். தாயின் தொடர் கண்டிப்பால், சிறுமியும் அவரது காதலனும் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சிறுமி தனது தாய் அஞ்சலிக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். தான் யமுனை நதிக்கரையில் உள்ள வான்கண்டி மகாதேவ் கோவிலில் இருப்பதாகவும், அங்கு வரும்படியும் தெரிவித்துள்ளார். இதனால், பெற்றோர் இருவரும் அந்த கோயிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் சிறுமியின் எண்ணிலிருந்து தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. கோவிலில் இருந்து சற்று தொலைவில் தான் இருப்பதாகவும், தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து உதித், மனைவி அஞ்சலியை அங்கேயே விட்டுவிட்டு மகள் கூறிய இடத்துக்கு சென்றார். ஆனால், அங்கு யாரும் இல்லை. அப்போது தந்தைக்கு செல்போனில் அழைத்த சிறுமி தான் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர், உதித் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு மனைவி அஞ்சலியைக் காணவில்லை.
இதையடுத்து உதித் மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிறகு நேற்று(ஜூன் 8) மாலை வான்கண்டி மகாதேவ் கோயில் அருகே உள்ள காட்டில் அஞ்சலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சலி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட அஞ்சலிக்கும் அவரது மைனர் மகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் அஞ்சலியின் மகள் மற்றும் அவரது காதலன் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கூறினர். இந்த சம்பவத்தையடுத்து பிரகார் குப்தா, அஞ்சலியின் மகள் உள்ளிட்டோர் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. சிறுமியின் காதலன் பிரகார் குப்தா அவரது நண்பன் உதவியுடன் இந்த கொலையை செய்திருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Mumbai Murder: லிவ் இன் பார்ட்னரை கூறுபோட்டு குக்கரில் வேக வைத்த கொடூரம்!