தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 20 பேர் படுகாயம்.. இம்பாலில் மீண்டும் ஊரடங்கு அமல்!

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், ஏறத்தாழ 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கலவரத்தை தொடர்ந்து மேற்கு மற்றும் கிழக்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

Manipur
Manipur

By

Published : Aug 3, 2023, 6:02 PM IST

இம்பால் : மணிப்பூரில் புதிதாக நடந்த கலவரத்தில் 20 பேர் வரை படுகாயம் அடைந்த நிலையில், தலைநகர் இம்பாலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் கலவரம் வெடித்து காணப்படுகிறது. மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் வெடித்த நிலையில் ஏறத்தாழ 3 மாதங்கள் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்த பாடு இல்லை. நாள்தோறும் கலவரச் சம்பவங்களால் மாநிலமே போர்க் களம் போல் காட்சி அளிக்கிறது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் முதல் முறையாக வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கலவரச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். மூன்று மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

கடந்த மே மாதம் மெய்தி இனப் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்தும், மெய்தியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க, மக்களவையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக நடந்த கலவரத்தில் 20 பேர் படுகாயம் அடைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள காங்வாய் மற்றும் பூகாக்சாவ் பகுதியில் கலவரம் வெடித்ததாகவும் துணை ராணுவம் மற்றும் அதிவிரைவு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்ததாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கலவரத்தை தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பாலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க :ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு.. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details